பிரிட்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ‘கேட் இன் தி ஹேட்’ (Cat in the Hat) கார்ட்டூன் உருவம் தொடர்பான பீதியை ஏற்படுத்திய தகவல்கள் அனைத்தும் வெறும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலி படங்கள் மற்றும் வீடியோக்கள் மட்டுமே என அயர்லாந்தின் காவல்துறை மற்றும் பிரிட்டன் காவல்துறையினர் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளனர்.
டாக்ஸ் மற்றும் டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில், பிரபல டாக்டர் சூஸ் (Dr. Seuss) கதைகளின் கதாபாத்திரமான ‘கேட் இன் தி ஹேட்’ போன்ற பயங்கரமான முகமூடி அணிந்த உருவம் வீடுகளின் வாசல்களிலும், தெருக்களின் இருட்டான பகுதிகளிலும் நடமாடுவது போன்ற புகைப்படங்கள் பரவின. அயர்லாந்தின் லிமரிக் மற்றும் வெக்ஸ்ஃபோர்ட் பகுதிகளில் தொடங்கிய இந்த வதந்தி, விரைவாகப் பிரிட்டனின் பிற பகுதிகளுக்கும் பரவி பொதுமக்கள் மத்தியில் வீணான பீதியை ஏற்படுத்தியது.
இதுகுறித்துத் தெளிவுபடுத்தியுள்ள அயர்லாந்தின் வெக்ஸ்ஃபோர்ட் காவல்துறை, “பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பார்க்கும் அனைத்தும் உண்மையானவை அல்ல. AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாதாரண வீதிகள் மற்றும் வீடுகளின் புகைப்படங்களில் இந்தக் கதாபாத்திரத்தை இணைத்து சிலர் குறும்பாகப் பதிவிட்டுள்ளனர். எந்தவொரு நபர் அல்லது உருவமும் வீடுகளுக்கு வெளியே நடமாடவில்லை” எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், பிரிட்டனின் சவுத் யார்க்ஷயர் காவல்துறையினரும் இதுகுறித்து எச்சரித்து, “அதிகாரப்பூர்வக் காவல் துறையின் கணக்குகளிலிருந்து வரும் தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும்; AI மூலம் பரப்பப்படும் இத்தகைய வதந்திகளைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை” எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.