பிரிட்டன் (UK) மற்றும் அயர்லாந்தில் “கேட் இன் தி ஹேட்” (Cat in the Hat) உடையில் ஒரு மர்ம நபர் இரவு நேரங்களில் உலா வருவதாகவும், வீடுகளின் வாசலில் நின்று அச்சுறுத்துவதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகள் மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியுள்ளன. புகழ்பெற்ற குழந்தைகள் புத்தகக் கதாபாத்திரமான இந்த உருவம், வீதிகளில் நடமாடுவது போன்ற புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் காட்டுத்தீ போல பரவி, பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை கிளப்பியது.
டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றன. “உங்கள் வீட்டின் கதவுகளைப் பூட்டிக் கொள்ளுங்கள், நான் வருகிறேன்” போன்ற மிரட்டல் பதிவுகள் வெளியானதால், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேறவே அஞ்சும் நிலை உருவானது. பல இடங்களில் மக்கள் இந்த மர்ம நபர் குறித்து காவல்துறையில் அடுத்தடுத்து புகார்களை அளிக்கத் தொடங்கினர்.
இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட அயர்லாந்து மற்றும் பிரிட்டன் காவல்துறை (Garda & UK Police), இந்தச் செய்திகளின் பின்னணியில் உள்ள உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது. இணையத்தில் பரவி வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி (Hoax) காட்சிகள் என காவல்துறை உறுதி செய்துள்ளது. நிஜத்தில் அப்படி எந்தவொரு நபா் உலா வரவில்லை என்றும் காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
போலி வீடியோக்களால் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டினால் வீண் பீதியும், காவல்துறைக்கு வீண் பணிச்சுமையும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.