Posted in

லிங்கன், வாஷிங்டனைப் பின்னுக்குத் தள்ளி தனக்குத் தானே முதலிடம் பிடித்த டிரம்ப்!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் சிறந்த அதிபர் (The Greatest President) தாந்தான் என்றும், தனக்கு அடுத்துதான் அப்ரஹாம் லிங்கன் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் போன்ற தலைவர்கள் வருகிறார்கள் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் பதிவிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியல் உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

டிரம்ப் பகிர்ந்துள்ள அந்தப் புகைப்படப் பட்டியலில், அமெரிக்க அதிபர்கள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் “மிகச் சிறந்தவர்” (The Greatest) என்ற உச்சகட்ட வரிசையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டுமே தனியாக இடம் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக உள்ள “சிறந்தவர்” (Great) என்ற பிரிவில் அமெரிக்க வரலாற்றின் முதன்மை தலைவர்களான ஜார்ஜ் வாஷிங்டன், அப்ரஹாம் லிங்கன், பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட், தாமஸ் ஜெஃபர்சன் மற்றும் வூட்ரோ வில்சன் ஆகியோர் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில், தமக்கு முந்தைய அதிபரான ஜோ பைடன் (Joe Biden), பராக் ஒபாமா (Barack Obama) மற்றும் ஜிம்மி கார்ட்டர் ஆகியோரை “தோல்வியடைந்தவர்கள்” (Failures) என்ற கடைசிப் பிரிவில் தள்ளி டிரம்ப் விமர்சித்துள்ளார். 1948-ஆம் ஆண்டு ‘லைஃப்’ (LIFE) இதழ் வரலாற்று வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கிய தரவரிசைப் பட்டியலின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, அதில் தன்னை முதலிடத்தில் இணைத்து டிரம்ப் இந்த வரைபடத்தைப் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வழக்கமாக வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் வெளியிடும் பட்டியல்களில் டிரம்ப் பின்னடைவையே சந்தித்து வந்த நிலையில், தன்னைத்தானே “மிகச் சிறந்த அதிபர்” என டிரம்ப் பிரகடனப்படுத்தியிருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஆதரவாளர்கள் இதனை டிரம்பின் வழக்கமான தன்னம்பிக்கை நடவடிக்கை என வரவேற்கும் அதே வேளையில், எதிர்த்தரப்பினர் நாட்டின் மாபெரும் தலைவர்களைக் காட்டிலும் தன்னை உயர்த்திப் பிடிக்கும் டிரம்பின் இந்த விசித்திரப் போக்கைக் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கி வருகின்றனர்.