சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் மீது ‘தியா’ (Theia) என்ற செவ்வாய் கிரக அளவிலான விண்கல் மோதியதில் வெளியான பாறைத் துகள்கள் மற்றும் விண்வெளிப் பொருட்கள் இணைந்தே நிலவு உருவானது என்பது அறிவியல் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாகும். இருப்பினும், இந்த இணைப்பு நிகழ்ந்து நிலவு ஒரு முழுமையான கோள வடிவத்தைப் பெற பல ஆண்டுகள் அல்லது பல மாதங்கள் ஆகியிருக்கலாம் என்றே இதுவரை நம்பப்பட்டு வந்தது. இந்நிலையில், வெறும் 5 மணி நேரத்திலேயே நிலவு முழுமையாக உருவாகியிருக்க வாய்ப்புள்ளது என சவுத்வெஸ்ட் ஆராய்ச்சி நிறுவனம் (SwRI) மற்றும் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘அஸ்ட்ரோபிஸிக்கல் ஜர்னல் லெட்டர்ஸ்’ (Astrophysical Journal Letters) இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வில், அதிநவீன கணினி உருவகப்படுத்துதல் (Computer Simulations) முறைகள் பயன்படுத்தப்பட்டன. மோதலுக்கு முன்பாக பூமி மற்றும் தியா ஆகிய இரு விண்வெளிப் பொருட்களின் வெப்பநிலை மற்றும் அவற்றின் பாறைகளின் இயந்திர வலிமை (Material Strength) எவ்வாறு இருந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கிரகங்களின் வலிமை மற்றும் வெப்பநிலையைக் கணக்கில் கொண்டு மீண்டும் ஆய்வு செய்தபோது, மோதல் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே ஒரு முழுமையான நிலவு உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது.
விண்வெளிப் பொருட்களுக்கு இடையே மோதல் ஏற்படும் போது அவற்றின் உள் கட்டமைப்பு மற்றும் வெப்பநிலை, மோதலின் வேகத்தையும் சிதறும் துகள்களின் திரட்சியையும் எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. “இரு கோள்களின் வெப்பநிலை கட்டமைப்பைத் துல்லியமாகப் பயன்படுத்திய போது, மோதல் நிகழ்ந்த வெறும் 5 மணி நேரத்திற்குள் முழுமையான வடிவிலான நிலவு உருவானதை எங்களால் காண முடிந்தது” என்று முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் அடீன் டென்டன் (Dr. Adeene Denton) தெரிவித்துள்ளார்.
இக்கண்டுபிடிப்பு, பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள வேதியியல் கலவை அமைப்பின் ஒற்றுமைகள் மற்றும் நிலவின் சுற்றுப்பாதையில் நிலவும் சாய்வுத்தன்மை போன்ற பல தசாப்த கால விண்வெளி புதிர்களுக்கு விடையளிக்க உதவும் எனக் கருதப்படுகிறது. பிரபஞ்ச வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் நிகழ்ந்த இந்த பிரம்மாண்ட விண்வெளி மாற்றம், விண்வெளி அறிவியல் சமூகத்தினரிடையே பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.