அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாட்டை முன்னிட்டு, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பிரம்மாண்ட அரசு அதிகாரப்பூர்வ விருந்து (State Dinner) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு வல்லரசு நாடுகளின் உறவை மேம்படுத்தவும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்தவும் நடத்தப்படும் இவ்விருந்தில், உலகின் முன்னணி தொழில் அதிபர்கள், பன்னாட்டு டெக் நிறுவனங்களின் சிஇஓ-க்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்கவுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் நடத்தும் இந்த விஐபி விருந்தில், ஆப்பிள் சிஇஓ டிம் குக், என்விடியா தலைவர் ஜென்சன் ஹுவாங், விண்வெளி மற்றும் எக்ஸ் தளத்தின் அதிபர் ஈலான் மாஸ்க், மெட்டா தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க அழைப்பைப் பெற்றுள்ளனர். சீனாவுடனான வர்த்தகம் மற்றும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்றுமதி கட்டுப்பாடுகள் முக்கியத்துவம் பெற்றுள்ள சூழலில் இவர்களின் பங்கேற்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்க திறந்த சந்தை மற்றும் நிதித்துறையின் பிரதிநிதிகளாகப் பிளாக்ரோக் (BlackRock) சிஇஓ லாரி ஃபின்க், ஜேபி மோர்கன் சேஸ் தலைவர் ஜேமி டிமோன் உள்ளிட்ட வால் ஸ்ட்ரீட் (Wall Street) நிதி நிறுவனங்களின் தலைவர்களும், அமெரிக்க அமைச்சரவை மூத்த அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத்துறை தலைவர்களும் இதில் கலந்து கொள்கின்றனர். சீனத் தரப்பில் அதிபர் ஜி ஜின்பிங்குடன் வருகை தந்துள்ள தூதுக்குழுவினர், சீன வணிக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரிகளும் விருந்தில் பங்கைற்கின்றனர்.
வர்த்தகப் போர், தைவான் விவகாரம் மற்றும் பரஸ்பர உளவு குற்றச்சாட்டுகளுக்கு இடையே நடைபெறும் இச்சந்திப்பில், உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் இருநாடுகளின் முக்கிய வணிகத் தலைவர்களும் ஒரே கூரையின் கீழ் இணைவது சர்வதேச வணிக வட்டாரங்களில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இவ்விருந்தின் போது டிரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் இடையிலான தனிப்பட்ட நட்புறவை வலுப்படுத்தவும், இருநாட்டு வணிக அமைப்புகளுக்கு இடையே இணக்கமான சூழலை உருவாக்கவும் வழிவகை செய்யப்படும் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.