அறிவியல் புனைகதை திரைப்படங்களின் காட்சிகளை நிஜமாக்கும் வகையில், உலகின் முதன்முறையாக மனிதனுக்கும் 6 அடி உயர ஹியூமனாய்டு (Humanoid) ரோபோவிற்கும் இடையே நடைபெற்ற கூண்டுச் சண்டை (Cage Fight) ரோபோவின் தீர்க்கமான வெற்றியுடன் முடிவடைந்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலின் காணொளிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘REK’ என்ற தொழில்நுட்ப அமைப்பு நடத்திய இப்போட்டியில், சீன நிறுவனமான ‘EngineAI’ தயாரித்த T800 ரக ஹியூமனாய்டு ரோபோ களமிறக்கப்பட்டது. ‘டெர்மினேட்டர்’ திரைப்படப் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த 80 கிலோ எடையுள்ள எஃகு ரோபோவை எதிர்த்து, அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிரான்கி லாபென்னா (Frankie LaPenna) என்ற நபர் பாதுகாப்புச் கவசங்களுடன் கூண்டிற்குள் சண்டையிட்டார்.
போட்டித் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மனித எதிராளி வீசிய குத்துகளை எளிதாகச் சமாளித்த ரோபோ, தனது எஃகு கால்களால் சரமாரியாக உதைகளை விளாசியது. இறுதியில், ரோபோ வீசிய ஒரு சக்திவாய்ந்த சுழல் உதை (Spinning Kick) எதிராளியின் தலையைத் தாக்கியதில், அவர் கூண்டின் மறுபக்கத்திற்குத் தூக்கி வீசப்பட்டு நாக்-அவுட் முறையில் தோற்கடிக்கப்பட்டார். இப்போட்டியில் எவ்விதப் பலத்த காயமுமின்றி மனித எதிராளி மீட்கப்பட்ட போதிலும், ரோபோவின் அசுர பலம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
மனிதர்களால் கட்டுப்படுத்தப்பட்ட தொலைஇயக்கி (Remote Control) நுட்பத்தின் மூலம் இந்த ரோபோ இயக்கப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் ரோபோக்கள் தற்காப்புக் கலைப் போட்டிகளிலும் (UFC/MMA) களமிறங்கக்கூடும் என்பதற்கான தொடக்கப் புள்ளியாக இப்போட்டி பார்க்கப்படுகிறது. மனித உடலமைப்பை விட உலோகம் மற்றும் பிளாஸ்டிக்கால் ஆன ரோபோக்களின் தாங்கும் திறன் அதிகம் என்பதால், இத்தகைய ‘மனிதன் விஎஸ் ரோபோ’ சண்டைகள் விளையாட்டு உலகிலும் தொழில்நுட்பத் துறையிலும் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளன.