எதிர்வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் மற்றும் அரசியல் கூட்டணிகள் குறித்துப் பேசினார். அப்போது, “அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின், தமது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர்களுக்குத் தமிழக வெற்றி கழகம் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருக்கக் கூடாது. மாறாக, தவெக கட்சியில் ஆரம்பத்திலிருந்தே பணியாற்றிய உண்மையான விசுவாசிகளுக்கு இடம் கொடுத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தற்போதைய சூழலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்குக் கூடுதலாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை இல்லை. ஆளும் கட்சிக்கு தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு உறுப்பினர்களை வைத்தே அடுத்த 5 வருடங்களுக்குத் தாராளமாக எந்தத் தடங்கலுமின்றி ஆட்சியைத் தொடர முடியும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாராபுரம் இடைத்தேர்தலில் சத்யபாமாவும், மதுராந்தகம் இடைத்தேர்தலில் மரகதம் குமரவேலும் தவெக தலைமையிலான ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி’ சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் எம்பியின் இந்த வெளிப்படையான விமர்சனம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.