அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம் நடத்திய ஸ்டார்ஷிப் 14-வது சோதனை ஓட்டத்தின் நேரலை ஒளிபரப்பில், விண்கலத்திற்குப் பின்னால் மர்மமான ஒளிரும் உருவம் ஒன்று தோன்றியது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஸ்டார்ஷிப் விண்கலம் விண்வெளியை அடைந்து சாட்டிலைட்டுகளை நிலைநிறுத்தியபோது, அதன் பின்னணியில் ஒரு வெளிர் நீல நிற ஒளிரும் கோடு போன்ற அமைப்பு நகர்வது நேரலையில் பதிவானது. இதைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் இது பறக்கும் தட்டு அல்லது வேற்றுக்கிரகவாசிகளின் விண்கலமாக (Mothership) இருக்கலாம் எனச் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
விண்கலம் விண்ணில் பாய்ந்த சுமார் 7 நிமிடங்கள் 55 வினாடிகளில் இந்த விசித்திரக் காட்சி நேரலையில் ஒளிபரப்பானது. விண்வெளியின் இருண்ட பின்னணியில் பிரகாசமான முனையுடன் கூடிய வளைந்த ஒளிக்கீற்று போன்ற அந்த உருவம் தோன்றியதும், எக்ஸ் (X) தளத்தில் பயனர்கள் “ஏய் இலான், இது வேற்றுக்கிரக தாய் விண்கலமா?” என்ற கேள்விகளுடன் காட்சிகளைப் பகிரத் தொடங்கினர். சிலர் இது சர்வதேச விண்வெளி நிலையமாக (ISS) இருக்கலாம் என்றும் அல்லது விண்வெளிக் கழிவுகளாக இருக்கலாம் என்றும் தங்களின் கருத்துக்களைப் பதிவிட்டனர்.
எனினும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் இதற்கு இயற்பியல் ரீதியான விளக்கங்களை அளித்துள்ளனர். ஏஐ தளமான குரோக் (Grok) வெளியிட்ட விளக்கத்தின்படி, இது சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட்டில் இருந்து வெளியேறிய எஞ்சின் வாயுவின் எச்சங்கள் (residual exhaust gas) விண்வெளி வெற்றிடத்தில் விரிவடையும் போது ஏற்படும் இயல்பான நிகழ்வு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மர்ம உருவம் குறித்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அல்லது அதன் தலைவர் இலான் மாஸ்க் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.
இந்தச் சோதனையின் போது ஸ்டார்ஷிப்பின் ஒரு எஞ்சின் எதிர்பாராதவிதமாகச் செயலிழந்த போதிலும், விண்கலம் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையை அடைந்து 26 ஸ்டார்லிங்க் வி3 செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியது. இத்தகைய தொழில்நுட்பச் சாதனையை விட, நேரலையில் தோன்றிய மர்ம உருவம் பற்றிய விவாதமே தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. விண்வெளி ஆர்வலர்கள் தொடர்ந்து இந்தக் காட்சிகளை ஆராய்ந்து வரும் நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் தரப்பிலிருந்து கூடுதல் விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.