தூத்துக்குடியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான முதன்மை குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நீதிபதி விஜயகுமார் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதேவேளையில், இந்த வழக்கில் தொடர்புடைய உறவினர் ஜெயபால் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2025 ஜூலை 27-ஆம் தேதி வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்த விவகாரத்தில் மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பெண்ணின் சகோதரர் சுர்ஜித் மற்றும் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வந்த அவருடைய பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோரை சிபிசிஐடி (CBCID) பொலிஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி கீழமை நீதிமன்றத்தில் சிபிசிஐடி பொலிஸார் விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தனர்.
தங்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் ஜெயபால் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி விஜயகுமார், அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு உத்தரவைப் பிறப்பித்தார். பெற்றோர் இருவர் மீதான குற்றப்பத்திரிகை எந்த அடிப்படையில் ரத்து செய்யப்பட்டது என்பது தொடர்பான முழுமையான தீர்ப்பு நகல் வெளியான பிறகே கூடுதல் காரணங்கள் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முதன்மை குற்றவாளி சுர்ஜித் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் மீதான சட்ட நடவடிக்கைகள் கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெறும். சிபிசிஐடி பொலிஸார் இந்தத் தீர்ப்பின் நகலை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், மேல்முறையீடு செய்வது குறித்து அடுத்தகட்ட முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.