உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் நடைபெற்ற ‘ஆபரேஷன் விவால்டி’ தாக்குதலின் போது, ரஷ்ய ராணுவத்தின் 94 வீரர்கள் உக்ரைனின் 3-வது ராணுவப் படையிடம் சரணடைந்தனர். போர்க்களத்தில் தங்களது அதிகாரிகள் தங்களைக் கைவிட்டுச் சென்றதாக கைதான வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
போர்க்களத்தில் உணவு மற்றும் குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், உயிர் பிழைப்பதற்காகத் தங்களது சொந்தச் சிறுநீரையும், மரப்பட்டைகள் மற்றும் காளான்-செடிகளைச் சமைத்தும் உட்கொண்டதாக ரஷ்ய போர்க்கைதிகள் கூறியுள்ளனர். 45 வயதான மேஜர் அலெக்சாண்டர் மனன்கோவ் தலைமையிலான இந்த வீரா்கள், வீணாக உயிரை இழக்க விரும்பாமல் உக்ரைன் படைகளிடம் சரணடைய முடிவெடுத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
போரில் போதிய உணவு மற்றும் குடிநீர் கிடைக்காததால், ரஷ்ய வீரர்கள் சிலர் நீரிழப்பு (dehydration) காரணமாக உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளதாக கைதான வீரர்கள் கவலை வெளியிட்டனர். உக்ரைன் ராணுவம் தங்களை மனிதநேயத்துடன் நடத்தியதாகவும், முறையான மருத்துவ உதவி மற்றும் உணவு வழங்கியதாகவும் ரஷ்யப் படைகளின் வீரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
தற்போது உக்ரைன் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரஷ்ய போர்க்கைதிகள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து ரஷ்ய ராணுவ அமைச்சகம் தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அல்லது பதிலும் அளிக்கப்படவில்லை.