துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற ஃப்ளைடுபாய் (Flydubai) விமானத்தில், ஓமன் நாட்டைச் சேர்ந்த உதவி விமானி, இந்தியப் தலைமை விமானியை கத்தியால் குத்தி விமானத்தை மோதி விபத்துக்குள்ளாக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவசரமாக சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பிற ஊழியர்களின் துணிச்சலான நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் உதவி விமானி தீவிரவாத சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும், இந்தச் சம்பவத்தில் ஈரானின் தலையீடு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காயமடைந்த இந்திய விமானி சுமித் மச்சார் சவூதி அரேபிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஓமன் நாட்டு உதவி விமானியை சவூதி அரேபிய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள அமைப்புகள் அல்லது தனிநபர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், வரும் நாட்களில் விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.