ஈரான் தலைநகர் டெஹ்ரானின் முக்கிய வீதிகள் மற்றும் சதுக்கங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைக் கேலி செய்யும் வகையிலும், அமெரிக்க ராணுவத்தை விமர்சிக்கும் வகையிலும் பிரம்மாண்ட விளம்பரப் பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. டெஹ்ரானின் வலி-அஸ்ர் சதுக்கம் மற்றும் ஜும்ஹூரி வீதி போன்ற பரபரப்பான பகுதிகளில் இந்த அரசியல் பிரச்சாரப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விளம்பரப் பலகைகளில் ஈரானிய ராணுவ வீரரின் பூட்ஸ் கால்களின் கீழ் அமெரிக்காவின் ட்ரோன்கள் நசுக்கப்படுவது போன்ற சித்திரங்களும், வளைகுடா பகுதியில் அமெரிக்கப் படைகளுக்கு எதிரான எச்சரிக்கை வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. அத்துடன், ஹோல்முஸ் ஜலசந்தி கடல்சார் வழித்தடப் பகுதியில் ஈரானின் ஆதிக்கத்தை உணர்த்தும் படங்களும், அமெரிக்காவின் போர்க்களச் பின்னடைவுகளை விமர்சிக்கும் கருத்துகளும் ஃபார்சி மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், ஈரானிய அரசு தங்களின் உள்நாட்டுப் பொதுமக்களிடையே தேசிய உணர்வை தூண்டுவதற்காக இத்தகைய பிரச்சார உத்தியைக் கையாண்டு வருகிறது. ஈரானின் இந்த காட்சிப் பிரச்சார நகர்வுகள் சர்வதேச அளவில் பெரும் கவனத்தையும், சமூக வலைதளங்களில் தீவிர விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
தற்போது டெஹ்ரானின் முக்கியக் கட்டிடங்களின் சுவர்களிலும் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் அருகிலும் கூடுதல் விளம்பரப் பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஈரானின் இந்த விளம்பரப் பலகைப் பிரச்சாரம் இரு நாடுகளுக்கும் இடையேயான மனோரீதியான போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.