ஜெர்மனியின் கூட்டாட்சி உளவு அமைப்பான BND-ன் முன்னாள் தலைவரான ஆகஸ்ட் ஹேனிங் (August Hanning), வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு அரசு ரகசியங்களை விற்றதாகவும், தேசத்துரோகத்தில் ஈடுபட்டதாகவும் எழுந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மன் கூட்டாட்சி அரசு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில்,தெற்கு ஜெர்மனியில் உள்ள பேட் டோல்ஸ்-வோல்ஃப்ராட்ஷவுசென் பகுதியில் வைத்து 80 வயதான ஆகஸ்ட் ஹேனிங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
1998 முதல் 2005 ஆம் ஆண்டு வரை BND அமைப்பின் தலைவராகச் செயல்பட்ட ஆகஸ்ட் ஹேனிங், BND அமைப்பின் முன்னாள் அதிகாரி மான்ஃப்ரெட் டி. என்பவரிடமிருந்து 2,000-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை விலைக்குப் பெற்று, அவற்றை வெளிநாட்டு உளவு அதிகாரிகளுக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அவருக்கு உதவியதாக மான்ஃப்ரெட் டி. என்பவரும் ஸ்டீன்பர்ட் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரது இருப்பிடங்களிலும் ஜெர்மன் கூட்டாட்சி குற்றவியல் காவல்துறையினர் (BKA) சோதனை நடத்தியுள்ளனர்.
ஜெர்மன் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஈனஸ் பீட்டர்சன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், வகைப்படுத்தப்பட்ட ரகசியத் தகவல்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு உளவுத்துறை ஊழியருக்கு ஆகஸ்ட் ஹேனிங் பகுப்பாய்வு அறிக்கை தயாரித்துக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இவர்கள் இருவரும் எந்த நாட்டிற்காக உளவு பார்த்தார்கள் அல்லது எந்த வெளிநாட்டு உளவு அமைப்புக்குத் தகவல்களை வழங்கினார்கள் என்ற விவரங்களை அதிகாரிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிட மறுத்துவிட்டனர்.
இந்தக் கைது நடவடிக்கை தொடர்பாகப் பேசிய BND அமைப்பின் தற்போதையத் தலைவர் மார்ட்டின் ஜெய்கர், உள்நாட்டுப் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது எனக் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள இருவரும் மத்திய விசாரணை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சமீபத்திய தசாப்தங்களில் ஐரோப்பாவில் நடந்த மிக முக்கியமான உளவு விவகாரங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.