சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட விரிவாக்கப் பணிகளின் ஒரு பகுதியாக, வணிக வசதிகள் மற்றும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய பிரம்மாண்டமான புதிய மெட்ரோ கட்டிடங்களை அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரியுள்ளது. பயணிகள் வசதியை மேம்படுத்தவும், பயணக் கட்டணம் அல்லாத வருவாயைப் பெருக்கவும் இந்த ஒருங்கிணைந்த வணிக வளாகத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் 4 அடுக்கு இயந்திரமயமாக்கப்பட்ட வாகன நிறுத்துமிடம் மற்றும் 7 மாடிகளைக் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய உயர்தரக் கட்டிடம் கட்டுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதேபோல், திருமங்கலம் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் மேம்பாலப் பாதையை ஒட்டிய திறந்தவெளிகளில் வணிக வளாகக் கட்டிடங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4 மற்றும் 5-வது மெட்ரோ வழித்தடங்களில் அமைந்துள்ள நந்தனம், போட் கிளப், பாரதிதாசன் சாலை, ஆழ்வார்பேட்டை, கச்சேரி சாலை மற்றும் ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட நிலையங்களில் நுழைவுப் பகுதிகளில் வணிக வளாகங்கள் மற்றும் இணைக்கும் பாலம் வசதிகள் அமைக்க வடிவமைப்பு ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. மெட்ரோ தொடர்வண்டி பாதையின் கீழ் மற்றும் மேல் உள்ள வான்வெளியைப் (Air rights) பயன்படுத்தி, ரயில் போக்குவரத்திற்கு இடையூறின்றி இக்கட்டிடங்கள் கட்டப்படவுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
தற்போது இந்த உள்கட்டமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் சமர்ப்பிக்கும் காலம் நிர்ணயிக்கப்பட்டு, பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மெட்ரோ நிறுவனத்தின் இந்த முயற்சியால் நகரின் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, பயணிகள் ஒரே இடத்தில் வணிகம் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகளை எளிதாகப் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.