கருங்கடல் பகுதியில் நேட்டோ உறுப்பு நாடுகளான ருமேனியா மற்றும் பல்கேரியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலங்களுக்குள் பயணித்த வர்த்தகக் கப்பல்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அக்டோபர் 5 மற்றும் 6, 2026 ஆகிய தேதிகளில் நடந்த இத்தாக்குதல்களில் இரு சரக்குக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன், மற்றொரு கப்பல் தீப்பற்றிச் சேதமடைந்துள்ளதாக ‘ராய்ஃப்ரஸ்’ மற்றும் ‘யூரோமைடன் பிரஸ்’ ஆகிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
டோகோ நாட்டுப் கொடியுடன் பயணித்த ‘ஆல்ஃபா வட்டான்’ (Alfa Watan) என்ற கப்பல் பல்கேரியக் கடற்பகுதியில் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கியதாக அப்ப நாட்டின் பிரதமர் ரூமென் ராதேவ் தெரிவித்துள்ளார். அதேபோன்று ருமேனியக் கடற்பகுதியில் தானியங்களை ஏற்றிச் சென்ற மற்றொரு வர்த்தகக் கப்பல் மீது ட்ரோன் தாக்கியதில் கப்பலின் கேப்டன் உயிரிழந்ததாகவும், 11 மாலுமிகள் மீட்கப்பட்டதாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவம் குறித்துப் பேசிய பல்கேரியப் பிரதமர் ரூமென் ராதேவ், சர்வதேச கடல்சார் விதிகளை மீறி நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கண்டித்துள்ளார். உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி இத்தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள போதிலும், தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்துப் பல்கேரிய மற்றும் ருமேனிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக எவ்வித உறுதியான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தற்போது கடலில் பாதிக்கப்பட்ட மாலுமிகளை மீட்கும் பணிகளும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவச் சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நேட்டோ எல்லைக்கு உட்பட்ட சர்வதேச கடல் வழிகளில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.