Posted in

பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு: பொதுமக்கள் குறைகளைக் கேட்டறிந்தார்!

தமிழ்நாடு முதலமைச்சரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான சி. ஜோசப் விஜய், தனது தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்து பொதுமக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்துள்ளார். முன்னதாக மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆவின் மைய ஆய்வகக் கட்டடத்தை அவர் திறந்து வைத்த பின்னர் பெரம்பூர் பகுதிக்கு வருகை தந்தார்.

பெரம்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய், அங்கு கூடியிருந்த ஏராளமான பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரில் பெற்றுக்கொண்டார். மேலும், அங்குள்ள இ-சேவை மையம் வாயிலாகச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்குப் பல்வேறு அரசு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். தொகுதி மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், பொதுமக்களின் கோரிக்கைகள் கையாளப்படும் முறை குறித்தும் அதிகாரிகளுடன் அவர் விரிவாக ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, பெறப்படும் மனுக்கள் மீது எந்தவித தாமதமும் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும், வடசென்னை பகுதிகளில் பருவமழைக் காலத்தில் வெள்ளநீர் தேங்குவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

முன்னதாக மாதவரம் பால் பண்ணையில் நாளொன்றுக்கு 7 லட்சம் லிட்டர் பால் கையாளும் வகையில் ரூ.152.26 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்ட பின், மழைக்கால பணிகளை விரைவுபடுத்துமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்திவிட்டு அவர் புறப்பட்டுச் சென்றார்.