ஹமாஸ் நடத்திய தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இஸ்ரேல் முழுவதும் நினைவேந்தல்கள் நடைபெற்று வரும் நிலையில், அந்நாடு இன்னும் 9/11 பாணியிலான பெரும் தீவிரவாத அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருவதாக பாதுகாப்புப் படை முன்னாள் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் நிகழ்ந்த ஃப்ளைதுபாய் (flydubai) விமானக் கடத்தல் முயற்சி இதற்கு முக்கியச் சான்றாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் இறுதியில் 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தை, அதன் உதவி விமானி ஹமாம் அல்-ஹம்மாமி கடத்தி விமான நிலையத்தின் மீது மோதச் செய்ய திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கையாண்ட இஸ்ரேலிய வான்படை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், ஒருவேளை விமானம் மிக முக்கியமான இடங்களைத் தாக்க முற்பட்டால் அதை வான்வழியிலேயே சுட்டு வீழ்த்தத் தயாராக இருந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
விமானத்தில் இருந்த மாற்று விமானி, பயணிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து கடத்தல் முயற்சியை முறியடித்ததை அடுத்து, அந்த விமானம் சவூதி அரேபியாவில் உள்ள தபூக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து சவூதி அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட உதவி விமானியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்றவர் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது.
ஈரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற அமைப்புகளிடமிருந்து இஸ்ரேலுக்குத் தொடர்ந்து இத்தகைய கொடூரமான தாக்குதல் அச்சுறுத்தல்கள் நிலவி வருவதாக மூத்த பாதுகாப்பு வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இத்தகைய வான்வழி மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அமைப்புகள் நாடு முழுவதும் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.