Posted in

மதுபான விடுதியில் வெடித்த வேப்: பெண்ணின் கைப் பையில் திடீர் தீ விபத்து

இங்கிலாந்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் பெண்ணொருவர் அமர்ந்திருந்தபோது, அவரின் கைப்பைக்குள் இருந்த மின்னணு சிகரெட் (வேப்) பேட்டரி திடீரென வெடித்து தீப்பிடித்தது. இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சிளிக்கும் காட்சி அங்குள்ள பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கைப்பைக்குள் இருந்த உதிரி பேட்டரி உலோகப் பொருட்களுடன் உராய்ந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைப்பையிலிருந்து திடீரெனப் புகை வெளிவந்ததைத் தொடர்ந்து, அப்பெண் உடனடியாகப் பையைத் தூக்கி எறிந்ததால் பெரும் காயம் ஏதுமின்றி தப்பினார். கைப்பையிலிருந்த சாவி மற்றும் பிற பொருட்கள் லித்தியம் பேட்டரியின் இரு முனைகளிலும் பட்டதால் மின்சுற்று ஏற்பட்டு தீப்பிடித்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தரம் குறைந்த அல்லது பாதுகாப்பற்ற உதிரி பேட்டரிகளைப் பயன்படுத்துவது இத்தகைய ஆபத்துகளை உருவாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

வேப் சாதனங்கள் மற்றும் உதிரி லித்தியம் பேட்டரிகளைப் பைகளிலோ அல்லது பாக்கெட்டுகளிலோ சாவிகள் மற்றும் நாணயங்களுடன் நேரடியாக வைக்க வேண்டாம் எனப் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன. மேலும், போலியான பேட்டரிகளை வாங்குவதைத் தவிர்க்குமாறும், அவற்றுக்கான பிரத்யேக உறைக்குள் வைத்துப் பாதுகாக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட பாதுகாப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மின்னணு சிகரெட்டுகளின் பேட்டரி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது வேப் சாதனங்களை இரவில் நீண்ட நேரம் சார்ஜரில் போட வேண்டாம் என்றும், சேதமடைந்த பேட்டரிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போதைக்கு இச்சம்பவத்தில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.