ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள கலீசியா கடற்கரை அருகே பயணித்துக் கொண்டிருந்த ‘ஸ்கை பிரின்சஸ்’ (Sky Princess) என்ற சொகுசு கப்பலில் பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் பயணி ஒருவருக்குத் திடீரென கடுமையான மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டது. கப்பலில் இருந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தபோதிலும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காகத் தரைவழி மருத்துவமனைக்கு மாற்ற வேண்டிய அவசரம் உருவானது.
இதனைத் தொடர்ந்து கப்பல் நிர்வாகம் உடனடியாக ஸ்பெயின் கடலோரக் காவல் படைக்குத் தகவல் தெரிவித்தது. தகவல் அறிந்த கடலோரக் காவல் படையினர் ‘பெஸ்கா 1’ (Pesca 1) என்ற தேடுதல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர் மூலம் கப்பல் இருந்த பகுதிக்கு விரைந்தனர். ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட அந்தப் பயணி, வீகோ நகரில் உள்ள அல்வாரோ குன்குயிரோ (Alvaro Cunqueiro) மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தின் போது கப்பலில் இருந்த ஊழியர்கள் மற்றும் ஸ்பெயின் மீட்புக் குழுவினர் இணைந்துச் செயல்பட்ட விதத்திற்குப் பயணிகள் பாராட்டு தெரிவித்தனர். இது தொடர்பாக ஸ்பெயின் கடலோரக் காவல் துறை வெளியிட்ட தகவலில், மருத்துவ அவசரநிலையைக் கருத்தில் கொண்டு மீட்பு நடவடிக்கை விரைவாகவும் வெற்றிகரமாகவும் முடிவடைந்தது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தப் பயணிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அவசர மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு சொகுசு கப்பல் ‘ஸ்கை பிரின்சஸ்’ தனது திட்டமிடப்பட்ட அடுத்த பயண இலக்கை நோக்கித் தொடர்ந்து பயணித்து வருகிறது.