ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட போராட்டக்காரர் ஒருவர், தண்டனை நிறைவேற்றப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு சிறையில் தனது காதலியைத் தொலைபேசி வாயிலாகத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இவர்களது இந்தத் திருமணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஈரான் நாட்டைச் சேர்ந்த 25 வயது நபரான அலிரேசா செபாஹி (Alireza Sepahi) என்பவருக்கும், மாணவர் ஆர்வலரான 22 வயது மஹ்ஷாத் கேஷானி (Mahshad Keshani) என்பவருக்கும் இடையே தொலைபேசி அழைப்பு மூலம் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரின் தந்தைகளும் தொலைபேசியில் இணைந்திருக்க, வழக்கறிஞர் ஒருவர் சடங்குகளை நடத்தி வைத்துள்ளார். இந்தச் சடங்கு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்துள்ளது.
இரானில் கடந்த காலங்களில் நடைபெற்ற போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட அலிரேசா செபாஹிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, உடல்நலக் குறைவு காரணமாகத் தற்காலிகமாகத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பெண் செயற்பாட்டாளரான மஹ்ஷாத் கேஷானி பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறை தண்டனை பெற்று வேறொரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். துயரமான சூழலில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வு மனித உரிமைகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.