சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருப்பதோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்துப் பொது ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தத் தாக்குதலில் மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 309 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த வகையில், பொதுமக்கள் மற்றும் அவசியமான சிவில் உள்கட்டமைப்பு மீது நடத்தப்படும் இது போன்ற தாக்குதல்கள் முற்றிலும் ஏற்புடையதல்ல என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், இப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதுடன், பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.