Posted in

நெதன்யாஹு ஒரு சீரழிந்த சூதாட்டக்காரர்: கடுமையாக விமர்சித்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவை கடுமையாக விமர்சித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நெதன்யாஹுவை ஒரு தேடப்படும் போர்க் குற்றவாளி எனக் குறிப்பிட்ட அராக்சி, அவர் அரேபியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் ஈரானியர்களின் இரத்தத்தைச் சிந்தியவர் என்று குற்றம்சாட்டினார். நீதியிலிருந்து தப்பிக்கவும் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஒரு சீரழிந்த சூதாட்டக்காரரைப் போல அமெரிக்க வீரர்களின் உயிரையும் நிதியையும் நெதன்யாஹு பயன்படுத்தி வருகிறார் என்று அவர் சாடியுள்ளார்.

மேலும், 2023 அக்டோபர் 7 தாக்குதலுக்கு முன்னதாக நெதன்யாஹுவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய மேஜர் ஜெனரல் அவி கில் அளித்த பேட்டியை அராக்சி சுட்டிக்காட்டியுள்ளார். தாக்குதலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே போர் அபாயம் குறித்து நெதன்யாஹுவுக்குத் தெரிந்திருந்தும், அவர் அதைத் தடுக்கத் தவறிவிட்டதாக அந்தப் பேட்டியில் சுட்டிக்காட்டப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அக்டோபர் 7 நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் மாற்றப்பட்டதாகவும், பிணையாளிகளை மீட்பதற்கான முயற்சிகள் முன்கூட்டியே பலன் அளித்திருக்கக்கூடும் என்றும் அந்தப் பேட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெதன்யாஹுவுக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் கூட அதிருப்தியில் உள்ளதாக அராக்சி தெரிவித்துள்ளார். அதேவேளையில், தனது முன்னாள் ராணுவச் செயலாளர் அவி கில் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நெதன்யாஹு தரப்பு, அவர் சரியான நேரத்தில் தங்களை எச்சரிக்கவில்லை என்றும் பொறுப்பைத் தட்டக்கழிக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தூதரக ரீதியிலான மோதல்களும் கருத்துப் போர்களும் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. அக்டோபர் 7 தாக்குதல் தொடர்பான புதிய தகவல்கள் மற்றும் அராக்சியின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.