Posted in

டிஜிட்டல் கற்றலுக்கு விடை கொடுத்து பேனா, காகிதத்திற்கு திரும்பிய பிரிட்டன் பள்ளி

1382-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நீண்ட பாரம்பரியம் கொண்ட ஹாம்ப்ஷயரில் உள்ள வின்செஸ்டர் கல்லூரி (Winchester College), 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களின் கற்றல் கவனத்தை லேப்டாப்புகள் சிதைப்பதாகத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகத் பெரும்பாலான வகுப்பறைப் பாடங்கள் மற்றும் வீட்டுப்பாடங்களுக்கு மீண்டும் பேனா மற்றும் காகிதத்தைப் பயன்படுத்தும் பாரம்பரிய முறைக்கு அப்பள்ளி திரும்பியுள்ளது. 9 முதல் 10 மற்றும் 13 முதல் 15 வயதுடைய மாணவர்களுக்குக் காகிதம் மற்றும் பேனாவைக் கொண்டு மட்டுமே வீட்டுப்பாடம் செய்வதைக் கட்டாயமாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்துப் பேசிய அப்பள்ளியின் தலைமை ஆசிரியை எலிசபெத் ஸ்டோன், வகுப்பறைகளில் லேப்டாப்புகளைப் பயன்படுத்துவது மாணவர்களின் கவனத்தை அதிகளவில் திசைதிருப்புவதாகக் கூறினார். லேப்டாப்பில் பணிபுரியும் போது மாணவர்கள் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்வதாகக் கருதிக்கொண்டு தங்களின் கவனத்தை வெவ்வேறு விஷயங்களுக்குச் சிதறடிக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், AI பயன்பாடுகள், 3D கணித மாதிரிகள் மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட மாணவர்களின் கற்றலுக்கு மட்டும் கணினிகள் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கப்படும் எனப் பள்ளி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

தொழில்நுட்ப பயன்பாடு மாணவர்களின் கவனிக்கும் திறனைக் குறைப்பதாக உலக அளவில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், பிரிட்டனின் முன்னணிப் பள்ளி எடுத்துள்ள இந்த முடிவு கல்வித் துறையில் கவனம் பெற்றுள்ளது. அதிகளவில் திரைகளைப் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கப் பல பள்ளிகள் இத்தகைய நடவடிக்கைகளை பரிசீலித்து வருகின்றன.

தற்போது புதிய கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் கவனம் செலுத்தும் நேரம் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மற்ற பிரிட்டன் பள்ளிகளும் வகுப்பறைகளில் டிஜிட்டல் திரைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்துத் திட்டமிட்டு வருகின்றன.