தில்லியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணியொருவரின் கையடக்க மின் சேமிப்புக்கருவி (Power Bank) திடீரென வெடித்துத் தீப்பிடித்தது. இதனால் விமானத்தின் பயணிகள் பகுதி முழுவதும் புகை சூழ்ந்ததோடு, பயணிகளிடையே கடும் பீதி ஏற்பட்டது. உடனடியாகச் செயற்பட்ட விமான ஊழியர்கள் தீயை அணைக்கும் கருவிகளைக் கொண்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதனைத் தொடர்ந்து விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க முடிவு செய்த விமானிகள், அவசரத் தேவையின் அடிப்படையில் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தைத் திருப்பித் தரையிறக்கினர். விமானத்தில் பயணம் செய்த அனைவரும் எந்தவித காயமுமின்றிப் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். லீத்தியம்-அயன் பேட்டரிகளில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது வெப்ப அதிகரிப்பு காரணமாகவே இதுபோன்ற விபத்துகள் நிகழ்வதாகத் தொடக்கக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சமீபகாலமாக விமானப் பயணங்களின் போது எலக்ட்ரானிக் சாதனங்களால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்து வருவது விமானப் பாதுகாப்புத் துறையினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பவர் பேங்க்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், விமானத்தில் அவற்றைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்தும் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்குப் பின்னரே சம்பந்தப்பட்ட விமானம் மீண்டும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.