காசா போரின் போது இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் இலக்குகள் குறித்து ‘நாஸா’ (NAZA) என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்று உருவாக்கப்பட்டு சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது. இதில் இஸ்ரேல் ராணுவத்தின் உளவுப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் சிலர் பெயரைக் குறிப்பிடாமல் ரகசிய வாக்குமூலங்களை அளித்திருந்தனர். இந்த ஆவணப்படம் நாட்டின் பாதுகாப்பிற்குப் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், பொய் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் இஸ்ரேல் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
இந்தச் சூழலில், ஆவணப்படத்தில் பங்கேற்று ராணுவத்தின் ரகசியத் தகவல்களை வெளிப்படுத்திய நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனப் பிரதமர் நெதன்யாகு கோரியுள்ளார். இது தொடர்பாக நாட்டின் ராணுவத் தலைமை தளபதி, ஷின் பெட் (Shin Bet) உளவுத்துறை தலைவர் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருக்கு அவர் அதிகாரப்பூர்வமாகச் கடிதம் எழுதியுள்ளார். தகவல் பாதுகாப்பு மீறல் மற்றும் நாட்டின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குப் மனித உரிமை அமைப்புகளும் ஊடகவியலாளர்களும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். அதேவேளையில், ராணுவ ரகசியங்களைப் பாதுகாப்பது அவசியம் என்பதால் விசாரணை துரிதப்படுத்தப்படும் என அந்நாட்டுப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இந்த விவகாரத்தில் உளவுத்துறையும் காவல்துறையும் முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ள நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.