Posted in

பிரிட்டன் ராணுவத்தின் அஜாக்ஸ் வாகன சோதனையில் காது பாதிப்பு: பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராக வழக்கு

பிரிட்டன் ராணுவத்தில் பணிபுரிந்த 46 வயதான முன்னாள் டேங்க் தளபதி ரொனால்ட் பெவன் (Jonathan Bevan), அஜாக்ஸ் (Ajax) ரகச் கவச வாகன சோதனைகளின் போது தனக்குக் கடுமையான காது இரைச்சல் (Tinnitus) மற்றும் செவிப்புலன் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக மருத்துவக் காரணங்களுக்காக ராணுவத்திலிருந்து 2023 ஜூன் மாதத்தில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) அலட்சியத்தால் தான் பாதிக்கப்பட்டதாகக் கூறி 5 லட்சம் பவுண்டுகளுக்கு மேல் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடந்துள்ளார்.

பிரிட்டன் ராணுவத்திற்காக 6.3 பில்லியன் பவுண்டுகள் மதிப்பில் உருவாக்கப்பட்டு வரும் புதிய அஜாக்ஸ் கவச வாகனத் திட்டம், அதிகப்படியான சப்தம் மற்றும் அதிர்வுகள் காரணமாக ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்திருந்தது. இந்த வாகனங்களின் சோதனை ஓட்டத்தின் போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும், அதிக சப்தத்தால் தனக்கு மனரீதியான பாதிப்புகளும் ஏற்பட்டது என்றும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வீரா் தொடர்ந்துள்ள இந்த வழக்கு பிரிட்டன் ராணுவ வட்டாரங்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அஜாக்ஸ் வாகனத் திட்டத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை தொடரவுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் தரப்பு விளக்கங்கள் மற்றும் சட்டரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.