Posted in

பிரான்சில் மாணவர்களின் தொடர் போராட்டங்களில் கலந்துகொண்ட க்ரெட்டா தன்பெர்க்

பிரெஞ்சுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறை, கூட்ட நெரிசலான வகுப்பறைகள் மற்றும் போதிய நிதியின்மை போன்றவைக் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் முதல் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாரிஸ் நகரின் வடக்குப் பகுதியில் உள்ள செயின்ட்-டெனிஸ் பகுதியில் அமைந்துள்ள உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற காலநிலை செயற்பாட்டாளர் க்ரெட்டா தன்பெர்க், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் இணைந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், இளைஞர்களின் குரல்கள் செவிமடுக்கப்படவில்லை என்றும், தங்களின் எதிர்காலம் சூறையாடப்படுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். மாணவர்களின் இந்தப் போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்களும் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

முறையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும், கல்வித்துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் கோரி மாணவர்கள் பள்ளிகளுக்கு வெளியே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மாணவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

கல்வித்துறை சார்ந்த இந்த விவகாரம் பிரான்ஸ் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அரசின் அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறிருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.