மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அமெரிக்கா மீண்டும் போரைத் தொடர்ந்தால் தங்களின் எதிர்வினை கடுமையாக இருக்கும் என ஈரான் வெளிப்படையாக எச்சரித்துள்ளது. குறிப்பாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என ஈரான் அதிகாரிகள் தரப்பில் மறைமுக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சாத்தியமான மோதல்களை எதிர்கொள்ளும் வகையில் ஈரான் தனது எல்லைப் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தி வருவதுடன், பாதுகாப்பு நிலைகளையும் பலப்படுத்தி வருகிறது. ஈரானின் இந்த அதிரடியான எச்சரிக்கை குறித்துத் தி வால் ஸ்டரீட் ஜர்னல் (The Wall Street Journal) வெளியிட்டுள்ள செய்தி உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா புதிய ராணுவ நடவடிக்கைகளில் இறங்கினால், பிராந்தியத்தில் உள்ள உள்கட்டமைப்புகள் மற்றும் தரவு மையங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் எச்சரித்துள்ளார். பிராந்தியத்தில் மோதல்கள் மேலும் விரிவடைவதைத் தவிர்க்கும் வகையில் தூதரக ரீதியான ஆலோசனைகளும் தீவிரமடைந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளின் தலைவர்கள் தீவிரமான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்புக்கும் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எத்தகைய பாதுகாப்பு மாற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சர்வதேச நாடுகளின் அடுத்த கட்ட ராஜதந்திர நகர்வுகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்த விவகாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.