சென்னையின் முக்கியப் பகுதியான சோழிங்கநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வருகை தந்திருந்தார். அப்போது அப்பகுதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களையும் தொண்டர்களையும் பார்த்த அவர், தனது வாகனத்தை விட்டு இறங்கி சாலையில் நடந்து செல்லத் தொடங்கினார். அவரைச் சுற்றிலும் பெரும் மக்கள் கூட்டம் அலைமோதிய போதிலும், எவ்விதச் சலசலப்புமின்றி அவர் மிகவும் அமைதியாகவும் இயல்பாகவும் நடைபோட்டுச் சென்றார்.
முதல்வரை ஒருமுறை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்லத்தில் அப்பகுதியில் திரண்டிருந்த மக்கள் அவரிடம் உற்சாகத்துடன் நலம் விசாரித்தனர். பொதுமக்களின் அன்பைப் பெற்றுக் கொண்டே பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் குறிப்பிட்ட தூரம் வரை நடந்து சென்றது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அரசியல் தலைவர்கள் பொதுவெளியில் இதுபோன்று எளிய முறையில் மக்களுடன் கலந்து பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்களும் வீடியோ பதிவுகளும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அப்பகுதியின் போக்குவரத்துச் சீரமைப்புப் பணிகள் குறித்துக் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.