Posted in

இலங்கை இளைஞருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது சவுதி உச்ச நீதிமன்றம்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 24 வயதான அனோஜன் சிவராசா என்பவர் சவுதி அரேபியாவில் கட்டிடப் பணிக்காகச் சென்றிருந்தார். சமூக வலைதள உரையாடல் ஒன்றின் போது மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறி, கடந்த ஜூலை மாதம் சவுதி அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் கீழ் நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்த நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் அதனை மரண தண்டனையாக உயர்த்தியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த சவுதி உச்ச நீதிமன்றம், சிவராசாவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைத் தள்ளுபடி செய்து வழக்கை மீண்டும் கீழ் நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பியுள்ளது. சவுதி நீதிமன்றத்தின் இந்த முடிவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, சிவராசாவின் விடுதலைக்கும் சட்டப்பூர்வ ஆதரவிற்கும் தனது அரசு தொடர்ந்து பாடுபடும் எனக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் இலங்கை தூதரக அதிகாரிகளின் தீவிர முயற்சியால் இந்தத் தீர்ப்பு சாத்தியமாகியுள்ளது.

வழக்கு மீண்டும் கீழ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால், புதிய தீர்ப்பு மற்றும் தண்டனை குறித்த விவரங்கள் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.