உக்ரைன் போர்க்களத்தில் ராணுவப் பயன்பாட்டில் உள்ள ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையச் சேவைகளில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம் திடீர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் நடத்தப்பட்டு வந்த நீண்ட தூரக் ட்ரோன் (Drone) தாக்குதல் மற்றும் ராணுவப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தடை குறித்துத் தங்களுக்கு எத்தகைய முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என அதிபரின் ஆலோசகர் செஹி மெஸ்கிரெஸ்ட்னோவ் (Serhiy Beskrestnov) தெரிவித்தார்.
மணிக்கு 160 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் நகரும் வாகனங்கள் மற்றும் சாதனங்களில் ஸ்டார்லிங் சேவைகளின் செயல்பாடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் திடீர் நடவடிக்கை தற்செயலானது அல்ல என்றும், தற்போதைய அரசியல் சூழல்களுடன் நேரடித் தொடர்பு உடையது என்றும் செஹி மெஸ்கிரெஸ்ட்னோவ் தனது டெலிகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள சில உரசல்களும் இந்த விவகாரத்திற்குப் பின்னணியாக இருக்கலாம் எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் ராணுவத்தின் தகவல் தொடர்பு மற்றும் தளவாடப் போக்குவரத்திற்கு ஸ்டார்லிங் சேவையே முதுகெலும்பாக விளங்கி வரும் நிலையில், இந்த திடீர் கட்டுப்பாடுகள் பாதுகாப்புப் பணிகளுக்குப் பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த விவகாரம் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து உக்ரைன் அரசு ஆலோசித்து வருகிறது.