Posted in

அமெரிக்காவில் இந்துக் கோயில் மீது தாக்குதல் நடத்த முயன்ற நபர் கைது: இந்து அமைப்புகள் எச்சரிக்கை

இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேச ஸ்வாமி (பாலாஜி) கோயிலை இலக்காகக் கொண்டு மாஸ் ஷூட்டிங் (mass shooting) எனப்படும் பெரிய அளவிலான துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்ட அலெக்சாண்ட்ரோஸ் பாபோராகிஸ் (Alexandros Paporakis) என்ற 19 வயது இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் வைத்திருந்த துப்பாக்கியில் திடீரென ஏற்பட்ட கோளாறு (gun jam) காரணமாகத் தாக்குதல் முயற்சியை நிறைவேற்ற முடியாமல் தப்பியோடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சக ஊழியர் அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், அவரது வீட்டிலிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள நபர் வெள்ளையின ஆதிக்க வெறி மற்றும் தீவிரவாத எண்ணங்களைக் கொண்டவர் என்பதுடன், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சார மேனிஃபெஸ்டோவையும் எழுதியுள்ளதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்து சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் இதுபோன்ற அச்சுறுத்தல்களைத் தீவிரமாகக் கருத வேண்டும் எனப் பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து உடனடியாகக் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர். கோயில்களில் ஆயுதம் தாந்திய காவலர்களின் ரோந்துப் பணி அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பார்வையாளர்களின் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மற்ற இந்துக் கோயில்களும் சமூக அமைப்புகளும் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் பலப்படுத்திக் கொள்ளுமாறும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.