Posted in

ஆளுநராகப் பொறுப்பேற்ற ராஜேந்திர விஸ்வநாத் அருளேக்கரை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து

கேரள ஆளுநராகப் பணியாற்றிய வந்த ராஜேந்திர விஸ்வநாத் அருளேக்கர், கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தின் கூடுதல் பொறுப்பையும் கவனித்து வந்தார். இந்நிலையில், குடியரசுத் தலைவரால் தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக அவர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டதை அடுத்து, முதலமைச்சர் விஜய் நேரில் சென்று மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார். இந்தச் சந்திப்பின் போது மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்களின் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து இருவரும் சுருக்கமாக விவாதித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாகக் கூடுதலாக ஆளுநர் பொறுப்பைக் கவனித்த காலத்திலிருந்தே தமிழக அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வரும் ஆளுநரின் வருகை, அரசு நிர்வாகத்திற்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகச் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது மற்றும் அரசின் கொள்கை முடிவுகளைச் செயல்படுத்துவதில் நிலவும் சுமுகமான சூழல் தொடரும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மக்கள் நலத் திட்டங்களை விரைவுபடுத்துவது மற்றும் மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முழுநேர ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ஆளுநர் அருளேக்கருடன் மாநில அரசு இணைந்து பணியாற்றுவதுடன், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு தமிழக அமைச்சரவை மாற்றம் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடவடிக்கைகள் குறித்த அடுத்த கட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.