பாரிஸை மையமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச எரிசக்தி முகமை வெளியிட்டுள்ள மாதாந்திர எண்ணெய் சந்தை அறிக்கையில் இந்தத் தகவலுடைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யா போன்ற பிராந்தியங்களில் தொடரும் மோதல்களால் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உலகளாவிய டீசல் விநியோகச் சங்கிலி சிதைந்து, கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு வெகுவாகக் குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போர் சூழல் காரணமாக மத்திய கிழக்கு மற்றும் ரஷ்யாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் டீசல் மற்றும் எரிபொருள் ஏற்றுமதி பெருமளவு சரிந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டீசல் பற்றாக்குறை வரலாறு காணாத அளவை எட்டியுள்ளதுடன், அதன் விலையும் முன்னெப்போதையும் விடக் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவதோடு, பணவீக்கம் அதிகரிக்கக் கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனைச் சமாளிப்பதற்காக அவசரகாலக் கையிருப்பில் உள்ள எண்ணெயை வெளியிடச் சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. எனினும், தொடர்ந்து நிலவும் ராணுவ மோதல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் எரிபொருள் சந்தையில் கடுமையான ஸ்திரமின்மை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் நிலவும் இந்த எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மாற்று வழிகள் குறித்து உலக நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.