டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான இலான் மஸ்க், டெக்சாஸ் மாகாணம் மெக்கிரிகோர் பகுதியில் அமைந்துள்ள ஸ்பேஸ்எக்ஸ் சோதனைத் தளத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் இந்த புதிய காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் தொழில்நுட்பக் கூறுகள் மற்றும் அழுத்தப்பட்ட காற்றுடன் இயங்கும் குளிர்-வாயு உந்துவிசைகள் (Cold-gas thrusters) இந்த காரில் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த மின்சார ஸ்போர்ட்ஸ் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை ஒரு விநாடிக்கும் குறைவான காலத்தில் எட்டும் ஆற்றல் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சியின் போது நடத்தப்பட்ட நேரலை சோதனையில், இந்த கார் காற்றில் உயர்ந்து சில வித்தைகளைச் செய்து பாதுகாப்பாகத் தரையிறங்கும் காட்சிகளும் இடம்பெற்றன.
இதன் ‘ராகெட்’ வகை மாடலானது முழுமையான விமான இயக்க அமைப்பைக் கொண்டுள்ளதாகவும், ஒற்றை நபர் பயணத்திற்கு உகந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் டெஸ்லா அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இந்த அதிநவீன அம்சங்கள் சாதாரணப் பொதுச் சாலைகளில் பயன்படுத்துவதற்குச் சட்டப்பூர்வ அனுமதி பெறுவது குறித்தான தெளிவான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த புதிய வாகனத்தின் உற்பத்திப் பணிகள் வரும் 2028ஆம் ஆண்டில் தொடங்கும் என டெஸ்லா நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பறக்கும் காரின் வருகை வாடிக்கையாளர்களிடையே ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.