Posted in

ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைன் தாக்குதல் அவமானம்: டொனால்ட் டிரம்ப் கடும் சாடல்

நியூஸ்மேக்ஸ் (Newsmax) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தத் தடாலடி கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் அதிபர் வொலோதிமிர் ஜெலென்ஸ்கி மீண்டும் தாக்குதல் நடத்தி வருவது குறித்துத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும், உலகளவில் டீசல் மற்றும் கச்சா எண்ணெய் விலையை உயர்த்துவதைத் தவிர இதனால் வேறு எந்தப் பலனும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை விட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமாக இருப்பதாக டிரம்ப் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் ஜெலென்ஸ்கி பிடிவாதம் காட்டி வருவதாகவும், அமெரிக்கா இணைந்து செயல்படக்கூடிய சரியான கூட்டாளியாக அவர் இல்லை என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே, ரஷ்யா தங்களது ஆற்றல் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாததால் தான், தாங்களும் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்கியதாக உக்ரைன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் இந்த தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் கண்டனங்கள், வாஷிங்டன் மற்றும் கெய்வ் இடையிலான தூதரக உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகப் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நிலவும் இந்த மோதல் போக்கைக் கட்டுப்படுத்தவும் போரை முடிவுக்குக் கொண்டு வரவும் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.