முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து விசாராணைக்கு ஆஜராகத் தயாராக இருப்பதாகவும் வாதிட்டார். காவல்துறை தரப்பில் ஆஜரான அரசுத் குற்றவியல் தலைமை வழக்கினர் ஜான் சத்தியன், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான முத்துக்குமார் தலைமறைவாக உள்ளதாகவும், அவர் முன்னாள் அமைச்சரால் பாதுகாக்கப்படுவதாகவும் வாதிட்டார்.
மேலும், இந்த விவகாரத்தில் ரூ.400 கோடி வரை வசூலிக்கப்பட்டிருக்கலாம் எனவும், நிதிப் பரிமாற்றங்கள் குறித்து முழுமையாக விசாரிக்க அன்பில் மகேஷைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதிபதி, முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை எந்தத் தேதியில் வழங்குவது என்பதைப் பின்னர் அறிவிப்பதாகத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசியல் மற்றும் கல்வி வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.