Posted in

ஜெலென்ஸ்கி மீதான டிரம்பின் விமர்சனம்: முழுமையாக ஏற்பதாக கிரெம்ளின் மாளிகை அறிவிப்பு

ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரத்தில் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி போதிய பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார். அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதை அவர் விரும்பவில்லை எனவும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவருக்கு உண்மையான விருப்பம் இல்லை எனவும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், டம்பின் இந்தக் கருத்துக்களுடன் மாளிகை முழுமையாக உடன்படுவதாக உறுதிப்படுத்தினார். அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது அதற்கான பொறுப்பை ஏற்கவோ ஜெலென்ஸ்கி விரும்பவில்லை என்பது முற்றிலும் தெளிவான உண்மை என ரஷ்ய அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தலைவர் வெளிப்படுத்திய இந்தக் கருத்துக்கள் தங்களது நீண்டகால நிலைப்பாட்டுடன் ஒத்துப் போவதாகவும் கிரெம்ளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் உக்ரைன் தலைவர்களுக்கு இடையே நிலவி வரும் இந்த முரண்பாடுகள் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளன.

இருப்பினும், உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் ஐரோப்பிய நாடுகள் இந்த விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்து வருவது குறிப்பிடத்தக்கது.