Posted in

சென்னையில் கோலாகலமாகிறது அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: நவம்பர் 21-ல் வரவேற்பு நிகழ்ச்சி

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறன் தம்பதியரின் மகளும், ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனுக்கும், முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களின் திருமணம் வருகிற நவம்பர் 11ஆம் தேதி வெளிநாடான கிரீஸ் நாட்டில் உள்ள முக்கியப் பகுதியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து, இவர்களது பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் உள்ள புகழ்பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ வழங்கும் பணிகளைச் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் தீவிரமாகத் தொடங்கி வைத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் இல்லத்தில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்துச் சன் குழுமத் தலைவர் குடும்பத்தினர் திருமண அழைப்பிதழை வழங்கி விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். மேலும் தமிழக அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கும் நேரில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

தமிழ் சினிமா உலகமும் கிரிக்கெட் உலகமும் இணையும் இந்த முக்கியத் திருமணம் குறித்த செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன.

இரு குடும்பத்தினரும் இணைந்து நடத்தும் இந்த வரவேற்பு நிகழ்ச்சி குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.