பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பின் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமெரிக்காவில் வரவிருக்கும் இடைத்தேர்தல் சிக்கல்கள் மற்றும் உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப டிரம்ப் உக்ரைன் மீது பழிசுமத்துகிறாரா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் லேசான புன்னகையை வெளிப்படுத்திய அவர், “இதுவே எனது பதில்” என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றார்.
முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை விட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமாக இருப்பதாக டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் உக்ரைன் தரப்பில் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்படுவதைக் சுட்டிக்காட்டி அமெரிக்கத் தரப்பு சில கருத்துக்களை முன்வைத்திருந்தது. இத்தகைய சூழலில் ஜெலென்ஸ்கி அளித்த இந்த நக்கல் கலந்த புன்னகைப் பதில் சர்வதேச ஊடகங்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஜெலென்ஸ்கியின் இந்த வித்தியாசமான எதிர்வினையைக் கண்டு அரங்கில் இருந்தவர்கள் அனைவரும் சிரிப்பலை எழுப்பினர். அமெரிக்கா மற்றும் உக்ரைன் தலைவர்களுக்கு இடையேயான உறவு மேலும் சீர்குலைந்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் ராஜதந்திர வட்டாரங்களில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் இந்த முரண்பாடுகள் குறித்த அடுத்த கட்ட நகர்வுகளைச் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தீவிரமாக உற்று நோக்கி வருகின்றனர்.