தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான ‘தேனிசை தென்றல்’ தேவா, உடல் நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது மறைவுச் செய்தி திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் ஊடகம் ஒன்றுக்குப் அளித்த பழைய பேட்டி ஒன்று தற்போது மீண்டும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பேட்டியில், தற்போதைய தமிழக முதலமைச்சரும், அன்றைய நடிகருமான சி. ஜோசப் விஜய்யின் ஆரம்பகாலத் திரையுலகப் பயணம் குறித்தும் அவரது பாடல் திறமை குறித்தும் தேவா பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
விஜய்யின் ஆரம்பகாலத் திரைப்படமான ‘ரசிகன்’ படத்தின் போதே அவருக்குப் பாடும் ஆர்வம் மற்றும் திறமை இருப்பதைத் தான் நன்றாகக் கவனித்ததாக தேவா அக்குறிப்பிட்ட பேட்டியில் தெரிவித்திருந்தார். அப்ப படத்தில் இடம்பெற்ற ‘பம்பாய் சிட்டி சுக்கர் ரொட்டி’ என்ற பாடலை நடிகர் விஜய்க்குத் தானே நேரில் சொல்லிக் கொடுத்துப் பாட வைத்துள்ளதாகவும் அவர் நினைவு கூர்ந்திருந்தார். இசையமைப்பாளர் தேவா இசையில் விஜய் பாடிய அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதாகவும், அதுவே பிற்காலத்தில் அவர் பல பாடல்களைப் பாட அடித்தளமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு நடிகராக மட்டுமின்றி நல்லதொரு பாடகராகவும் மிளிரும் விஜய்யின் ஆரம்ப காலக்கட்டத்தில் தனக்கும் அவருக்கம் இடையே இருந்த நல்லுறவை தேவா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்ட அந்த நினைவுகள் தற்போது பலரால் ஈர்க்கப்பட்டு வருகின்றன. தேவா இசையில் உருவான பல கானா மற்றும் மெல்லிசைப் பாடல்கள் தமிழ் சினிமா வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ளதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
முன்னதாக, மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.