சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 5-வது வழித்தடமான மாதவரம் பால் பண்ணையில் தொடங்கி கோயம்பேடு, போரூர் மற்றும் ஆலந்தூர் வழியாகச் சோழிங்கநல்லூர் வரை சுமார் 47 கிலோமீட்டர் தூரத்திற்குப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த வழித்தடத்தில் நிலத்தடி மற்றும் உயர்மட்டப் பாதை அமைக்கும் பணிகள் தற்போது 70 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இப்பணிகள் காரணமாக வானுவம்பேட்டை முதல் மேடவாக்கம் வரையிலான முக்கியச் சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டதால் வாகன ஓட்டிகள் தினசரி கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
நங்கநல்லூர், புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்கட்டளை மற்றும் கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் குறுகலாக உள்ளதாலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அலுவலக நேரங்களில் இப்பகுதிகளில் பயணLர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுவதால், தற்காலிகமாகவாவது சாலைகளைச் சீரமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மெட்ரோ ரயில் அதிகாரி வெங்கட ரமணன், முழுமையான மெட்ரோ கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின்னரே சாலைகள் மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றார். அதன் பிறகு தமிழ்நாடு அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டு முறைப்படி புதிய சாலைகள் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையேயான இந்த முக்கிய மெட்ரோ வழித்தடத்தின் சேவைகள் மற்றும் கட்டுமானப் பணிகளை விரைவில் முடிக்கத் திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.