Posted in

பிரான்சில் வெடித்த போராட்டம்: தீப்பற்றி எரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகர மன்றக் கட்டடம்

பிரான்ஸ் முழுவதும் எரிபொருள், ஆற்றல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வை எதிர்த்துப் பொதுமக்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் சனிக்கிழமை தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களின் போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் வெடித்தன. குறிப்பாக, லிமோஜஸ் (Limoges) நகரில் முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் நகராட்சி அலுவலகத்திற்குத் தீ வைத்ததைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 143 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சின்னமான நகர மன்றத்தின் உச்சி கோபுரம் தீயில் கருகிச் சரிந்தது.

இந்த நாடுளாவிய ஆர்ப்பாட்டங்களில் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக அரசுத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டதோடு, பொதுச் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் தண்ணீர்ப் பீச்சியடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் சுமார் 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 150-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) உறுதிப்படுத்தியுள்ளார்.

அரசு நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எச்சரித்துள்ளார். வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது சமரசமின்றி கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதித்துறை அமைச்சகமும் உத்தரவிட்டுள்ளது.

தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதால், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து குவிக்கப்பட்டுக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.