சார்தீனியா தீவில் அமைந்துள்ள கொரோப்பெடு (Gorropeddu) என்ற குகைப் பகுதியில் லுக்கா ஒல்மெட்டோ (Luca Olmetto) என்ற 31 வயது குகை ஆராய்ச்சியாளர் தனது நண்பர்களுடன் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட பாறைச் சரிவு காரணமாக, சுமார் 10 மீட்டர் ஆழத்தில் பாறைகள் மற்றும் இடிபாடுகளுக்கு நடுவே அவர் நகர முடியாதபடி சிக்கிக் கொண்டார். அவருடன் சென்ற நண்பர்கள் உடனடியாக அவசர உதவிக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
குகையின் உட்பகுதி பாதுகாப்பற்றதாக இருந்ததால் கூடுதல் பாறைகள் சரிந்து விழும் அபாயத்திற்கு இடையே மீட்புக் குழுவினர் கவனமாகப் பணிகளை மேற்கொண்டனர். இத்தாலிய ஆல்ப்ஸை சேர்ந்த குகை மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் உதவிகளுடன் சுமார் 100-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இந்தச் கரடுமுரடான மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 27 மணி நேர தொடர் முயற்சியில் பாறைகளை அகற்றி, காயமடைந்த நிலையில் இருந்த லுக்காவை மீட்ட மீட்புக் குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
லுக்கா ஒல்மெட்டோ ஆபத்தான கட்டத்தைத் தாண்டி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார் என்றும், அவரது விடாமுயற்சி மற்றும் மன தைரியத்தைப் பாராட்டுவதாகவும் நுஓரோ தீயணைப்புத் துறை அதிகாரி சால்வதோர் கொராவ் தெரிவித்துள்ளார். லுக்கா பாதுகாப்பாக மீட்கப்பட்ட செய்தி அவரது சொந்த ஊரான கொட்ரோங்கியானோஸ் நகரில் உள்ள மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குக் காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.