ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகளைக் கண்டித்துப் பொதுமக்கள் மற்றும் மாணவர் அமைப்பினர் கடந்த சில நாட்களாகத் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸ் முழுவதும் நடைபெற்ற நாடுளாவிய போராட்டங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட நிலையில், சில இடங்களில் அவை வன்முறையாக மாறியது. பாரீஸ் மற்றும் போர்டோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் வணிக வளாகங்கள் மற்றும் ஆடம்பரக் கடைகளைச் சூறையாடியதோடு, பொதுச் சொத்துகளுக்கும் தீ வைத்துள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகப் பிரான்ஸ் முழுவதும் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் நூற்றுக்கணக்கான பாதுகாப்புப் பணியாளர்களும் தீயணைப்பு வீரர்களும் காயமடைந்துள்ளனர். இதேபோல், இத்தாலியின் மிலன் நகரின் மையப்பகுதியிலும் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
வன்முறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எச்சரித்துள்ளார். போராடும் உரிமை அனைவருக்கும் உண்டு என்றாலும், நகரங்களுக்குத் தீ வைப்பதை அனுமதிக்க முடியாது என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, நிலைமையைைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.