பிரிட்டன் விமானப் படைக்குச் (RAF) சொந்தமான ஹாக் டி2 பயிற்சிப் போர் விமானம் ஒன்று கடந்த செப்டம்பர் 23 அன்று ஆங்கிள்சி பகுதியில் உள்ள ஆர்ஏஎஃப் வேலி தளத்திலிருந்து புறப்பட்ட சில நொடிகளில் தீப்பற்றி விபத்துக்குள்ளானது. குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வீடுகளுக்கு மிக அருகில் தீப்பற்றிப் படர்ந்த இந்த விபத்தின் போது, விமானத்தில் இருந்த அனுபவமிக்கப் பயிற்றுநர் மற்றும் பயிற்சிப் பைலட் ஆகிய இருவரும் பாராசூட் மூலம் குதித்து லேசான காயங்களுடன் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விமானத்தின் எரிபொருள் மூடி (fuel cap) பொருத்தப்படாமல் விடப்பட்டதே தீ விபத்துக்கு முக்கியக் காரணம் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
தரையில் பணியாற்றிய தொழில்நுட்பக் குழுவினரின் அலட்சியம் காரணமாகவே எரிபொருள் மூடி பொருத்தப்படாமல் போனதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டேக்-ஆஃப் செய்யப்பட்ட போது கசிந்த எரிபொருள் காரணமாகவே விமானத்தின் பின்புறத்தில் பயங்கரத் தீப்பற்றியதாகப் புலனாய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சுமார் 20 வினாடிகள் மட்டுமே வானில் பறந்த அந்த விமானம், குடியிருப்புப் பகுதிகளை நோக்கிச் செல்வதைத் தடுக்க பைலட்டுகள் முயற்சி செய்து, இறுதியாக விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பாக அவசரமாக வெளியேறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் அரச விமானப்படைப் பிரிவு, விசாரணை தொடர்வதால் விரிவான தகவல்களை உடனடியாக வெளியிட முடியாது எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், தரைக் குழுவின் பராமரிப்பு முறைகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்துக் கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.
விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறியத் தகுந்த புலனாய்வு விசாரணைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.