Posted in

அமெரிக்கச் சோளக் கொல்லையில் விழுந்த விசித்திரப் பொருள்: விண்வெளிப் கழிவா என எஃப்.பி.ஐ ஆய்வு

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தின் ஸ்டீவன்ஸ் கவுண்டிக்கு உட்பட்ட ஸ்காட் டவுன்ஷிப் பகுதியில் உள்ள சோளக் கொல்லையில் விசித்திரமான உலோகம் போன்ற பொருள் ஒன்று கிடப்பதை உள்ளூர் விவசாயி ஒருவர் அக்டோபர் 14 அன்று கண்டறிந்தார். இது குறித்து உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்டீவன்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலக அதிகாரிகள், சுமார் 11 அடி அகலம் கொண்ட அந்தப் பெரிய உலோகப் பொருளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அந்தப் பொருளின் அடிப்பகுதி தீப்பிடித்து எரிந்தது போல் கருகிய நிலையிலும், விளிம்புகள் கூர்மையாகவும் சிதைந்த நிலையிலும் காணப்பட்டன.

இந்தப் பொருள் விண்வெளியில் இருந்து புவியீர்ப்பு விசையால் பூமிக்கு விழுந்த செயற்கைக்கோள் அல்லது ராக்கெட்டின் கழிவாக (Space Debris) இருக்கலாம் என்று அதிகாரிகள் முதற்கட்டமாக சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட அதிகாரிகள் இதுகுறித்து மாநிலப் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அமெரிக்காவின் கூட்டாட்சி புலனாய்வு அமைப்புகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். நிலத்தில் விழுந்துள்ள அந்த உலோக உருளையில் சில தொடர் எண்கள் (Serial numbers) பொறிக்கப்பட்டுள்ளதால், அதைக் கொண்டு அதன் உரிமையாளரைக் கண்டறியும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சோளக் காட்டில் சுமார் ஆறு வாரங்களாக இந்தப் பொருள் கிடந்திருக்கலாம் எனப் பயிர் வளர்ச்சியின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த விசித்திர உலோகப் பொருளினால் பொதுமக்களுக்கு எவ்விதப் பாதிப்போ அல்லது ஆபத்தோ இல்லை என்று உள்ளூர் அதிகாரிகளும் கூட்டாட்சி முகமைகளும் தெளிவுபடுத்தியுள்ளனர். நிலத்தில் விழுந்த பொருள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்றும், விசாரணை முடிவடைந்த பிறகே உண்மை தெரியவரும் என்றும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் கூட்டாட்சி அமைப்புகள் இந்தப் பொருளை அகற்றுவது குறித்தும் அதன் பின்னணி குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.

மின்னசோட்டா நிலப்பரப்பில் விழுந்த இந்தப் பொருள் விண்வெளிக் கழிவுதானா என்பது குறித்துப் பல்வேறு மத்திய அமைப்புகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.