Posted in

பெண்களை இழிவுபடுத்துவதுதான் தவெகவின் வியூகமா: முதல்வர் விஜய்க்கு மேயர் பிரியா சரமாரிக் கேள்வி!

சமூக வலைதளங்களில் தன் மீது நடத்தப்படும் இணையவழித் தாக்குதல்கள் மற்றும் ஆபாசப் பிரசாரங்கள் குறித்துச் சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுவாழ்வில் இருக்கும் தன்னைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்துத் தொடர்ந்து அவதூறான கருத்துகளும் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களும் பரப்பப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாகத் தான் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் வேதனை தெரிவித்தார்.

தவெக ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதற்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஏன் மௌனம் காக்கிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக கட்சியைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே மாண்பும் கண்ணியமும் உள்ளதா என்றும், மாற்றுக் கட்சிகளில் பணியாற்றும் பெண்களுக்கு அந்த உரிமை இல்லையா என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார். அரசியல் ரீதியாகக் கருத்துகளை எதிர்கொள்ளாமல், பெண்களைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதுதான் தவெகவின் அரசியல் வியூகமா எனவும் அவர் வினவியுள்ளார்.

தமது கட்சித் தலைவர்கள் தவறு செய்பவர்களை உடனடியாகக் கண்டிப்பதாகவும், ஆனால் தவெக தரப்பில் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கப்படுவதில்லைய என அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்யும் வகையில் ஆளுங்கட்சியும் காவல்துறையும் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான இணையவழித் தாக்குதல்கள் குறித்து சென்னை மேயர் பிரியா எழுப்பியுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.