Posted in

யமன் முகாம் மீது ஹவுதி அமைப்பு ஏவுகணை தாக்குதல்: 58 பேர் பலி மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயம்!

யமன் நாட்டின் ஷப்வா (Shabwa) மாகாணத்தில் உள்ள அல்-அலாம் (Al Alam) அரசுப் பாதுகாப்புப் படை பயிற்சி முகாம் மீது திங்கள்கிழமை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொடூரத் தாக்குதலை நடத்தினர். ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் தொடுத்த இந்தத் திடீர் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் முகாமில் பயிற்சி பெற்று வந்த புதிய படைவீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் குறைந்தது 58 பேர் உயிரிழந்ததாகவும், 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்ததாகவும் ஷப்வா மாகாண ஆளுநர் அவாத் அல்-வசிர் (Awad al-Wazir) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

முகாமில் பாதுகாப்புப் பணியாளர்களின் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அடுத்தடுத்து மூன்று ஏவுகண்கள் விழுந்து வெடித்ததாகக் காயமடைந்த நசீர் ஷேக் பஹாஜ் என்ற பயிற்சி வீரர் ஊடகங்களிடம் தெரிவித்தார். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உளவு விமானங்கள் பறந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் அப்பகுதியைப் பாதுகாப்பதற்காகப் புதிதாகச் சேர்க்கப்பட்ட உள்ளூர் இளைஞர்கள் என்றும், இவர்கள் எந்தவொரு போர் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தரப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இந்த வன்முறைச் சம்பவங்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தாக்குதலில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.