Posted in

எல்லைப் பகுதிக்குத் புதிய படைகளை அனுப்பிய வடகொரியா: கிம் யோ ஜாங் எச்சரிக்கையால் பதற்றம்!

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டு இறந்துவிட்டதாகச் சர்வதேச அளவில் வதந்திகள் பரவிய சூழலில், அவரது சகோதரியும் சக்திவாய்ந்த அதிகாரியுமான கிம் யோ ஜாங் தென்கொரிய எல்லையை ஒட்டிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். இந்த ஆய்வின் போது, வடகொரியாவின் புதிய ராணுவப் படைகள் எல்லையோரப் பகுதியில் தாக்குதல் நடத்தும் வகையில் ‘துப்பாக்கிச் சூடு நிலைகளில்’ (firing positions) தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தென்கொரிய ராணுவம் எச்சரிக்கைச் சூடு நடத்தியதாகவும், பிரசார ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர், தென்கொரியாவிற்கு எதிராகக் கடுமையான போர்த்தந்திர நகர்வுகள் மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.

வடகொரியத் தலைவரின் மறைவு குறித்து வெளிவந்த வதந்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, அதிபர் கிம் ஜோங் உன் பியாங்யாங்கில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்ட புதிய புகைப்படங்களை அந்நாட்டு அரசு ஊடகம் அண்மையில் வெளியிட்டிருந்தது. இருப்பினும், எல்லையில் நிலவும் இந்தத் தீவிரமான சூழல் குறித்து மூத்த ராணுவ அதிகாரி பாக் ஜோங் சோனுடன் இணைந்து கிம் யோ ஜாங் களப்பணிகளைப் பார்வையிட்டுள்ளார். தென்கொரியாவடனான உறவுகளைத் துண்டிக்கும் அரசின் கொள்கைக்கேற்ப எல்லையில் கம்பிவேலிகள், தொட்டி எதிர்ப்புத் தடைகள் மற்றும் நிலக்கண்ணி வெடிகளைப் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வடகொரியாவின் இந்தத் தொடர் எச்சரிக்கைகள் மற்றும் எல்லை நகர்வுகளுக்குத் தென்கொரிய ராணுவத்தின் கூட்டுப் படைத் தலைவர்கள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடகொரியா எதேனும் ராணுவ அத்துமீறல்களில் ஈடுபட்டால் அதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனத் தென்கொரிய ராணுவம் எச்சரித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தின் எல்லையில் இரு நாடுகளும் தங்களது படைகளைத் தீவிரக் கண்காணிப்பில் வைத்துள்ளதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.